திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


 திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடுத்தடுத்து விருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.


பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக நிர்வாகியை அரைநிர்வாணமாக தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.இவர் சிறையில் இருந்து வெளியே வந்த ன்று அதிமுக நிர்வாகிகள் புழல் சிறை வாசலில் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.இந்த நிலையில் பெயிலில் வந்திருக்கும் ஜெயக்குமார்.. இது நிபந்தனை ஜாமீன் என்பதால் திருச்சியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு சென்றாலும், திருச்சிக்கு வந்தும் மீண்டும் அங்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார். அது பெரிய நட்சத்திர ஹோட்டல் ஆகும். சாப்பாடு நன்றாக இருக்கும் என்றாலும் ஜெயக்குமார் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பல நாள் ஆகிவிட்டதாம்.நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டாலும் வீட்டு சாப்பாடு போல வராது என்று இவர் தன்னை சந்திக்க வந்த அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கூறி இருக்கிறாராம். இந்த நிலையில்தான் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மாறி மாறி விருந்து வைத்து வருகிறார்களாம். ஜெயக்குமாருக்கு கடல் உணவுகள் என்றால் ரொம்ப பிரியம். முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் என்றால் கேட்கவா வேண்டும்.இதனால் திருச்சி முன்னாள் துணை மேயரான சீனிவாசன்.. தன்னுடைய வீட்டிலேயே உயர்ந்த மீன் வகைகளை சமைத்து அதை ஜெயக்குமாருக்கு கொடுத்து இருக்கிறார். ஜெயக்குமார் மட்டுமின்றி அதிமுக நிர்வாகிகள் பலரை மொத்தமாக அழைத்து விருந்து வைத்து இருக்கிறார் திருச்சி முன்னாள் துணை மேயரான சீனிவாசன். இதனால் மனம் குளிர்ந்து போன ஜெயக்குமார்.. ரொம்ப நாளாச்சு இப்படி மீன் சாப்பிட்டு என்று உருக்கமாக சந்தோசத்தோடு சொல்லி இருக்கிறாராம். மீன், நண்டு உணவுகளை இவர் ருசித்து சாப்பிடுவார் என்று கூறப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஜெயக்குமாரை பார்த்து ஆறுதல் அளித்து இருக்கிறார். நீங்க வெளியே வந்துட்டீங்களா.. இனி எல்லாம் நல்லா நடக்கும். நாங்க உங்களுக்கு இருக்கோம்... ஜெயில்ல ரொம்ப இளைச்சு போயிட்ட மாதிரி இருக்கு என்று கூறி இருக்கிறார். அதற்கு ஜெயக்குமாரோ.. அங்கு எனக்கு தண்ணீர் கூட சரியான நேரத்தில் தரவில்லை என்று வருந்தி இருக்கிறார்.இதையடுத்து வாங்க நாங்க சாப்பாடு போடுகிறோம் என்று கூறி மத்திய உணவு விருந்து அளித்து இருக்கிறார். சிக்கன் ப்ரை, வஞ்சிரம் வறுவல், இறால் தொக்கு, மீன் வறுவல் என்று மொத்தமாக எல்லாத்தையும் இறக்கி அசத்தி இருக்கிறாராம். இது ஒரு பக்கம் இருக்க தோட்டத்தில் கிடா வெட்டி, அங்கேயே ஜிலு ஜிலு காற்றுக்கு இடையே ஜெயக்குமாருக்கு விருந்து வைத்து இருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி.கிட்டத்தட்ட ஜெயக்குமாருக்கு விருந்து வைப்பதில் அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் போட்டியே நிலவுகிறதாம். அவர் சிறையில் இருந்த போது யாரும் கவனிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்திருக்கிறார். இதனால் அவரை இப்போது கொண்டாடுகிறார்கள். அதோடு அவருக்கு கட்சி ரீதியாக பெரிய பதவிகள் வரலாம் என்கிறார்கள். இதனால் அவரை நிர்வாகிகள் இப்போதே கொண்டாடி அவரின் குட் புக்கில் இடம்பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.