வாஷிங்டன்: கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து, அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க, ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது, அமெரிக்கா.

அமெரிக்கா முழுவதும் பாதிப்பு
அமெரிக்காவில் உள்ள, 50 மாகாணங்களிலும், கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதுவரை, 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 105 பேர் பலியாகியுள்ளனர். 'நியூயார்க் நகரம் முழுவதும் முடக்கப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ''அமெரிக்கா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, மாகாணங்களின் ஆளுநர்கள் கண்டறிய வேண்டும். அவர்கள் கேட்டுக்கொண்டால், அப்பகுதிகளில், புதிய மருத்துவமனைகள் அமைக்க ராணுவம் அனுப்பப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்க...
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் தேசத்தையே முடக்கலாம். ஆனால், அது தேவைப்படாது என, நம்புகிறேன். கொரோனாவால் ஏற்படும் பாதிப்பிலிருந்து, அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க, ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.74.22 லட்சம் கோடி) ஒதுக்குகிறோம். ஒரு ட்ரில்லியன் நிதி என்பது, பிரிட்டனின் மொத்த பட்ஜெட்க்கு சமமானது. மறைமுக எதிரியை வீழ்த்துவதற்கான உலக யுத்தம் நடக்கிறது; இதில் நாம் உறுதியாக வெற்றி பெறுவோம்,'' என்றார்.

அமெரிக்கா நிதித்துறை செயலாளர் ஸ்டீவின் கூறுகையில், 'ஒரு ட்ரில்லியன் டாலரில், 250 பில்லியன் டாலர்களை மக்களுக்கு வழங்கவுள்ளோம். அதுபோக மீதி தொகை, பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

கொரோனாவால் கடும் பாதிப்புக்குள்ளான சீனா, அதற்கான மருந்து கண்டறியப்படாத நிலையிலேயே பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது. மருந்து கண்டறிந்ததாகக் கூறப்படும் இச்சூழலில், 'கொரோனாவுக்கு எதிரான உலக யுத்தம் நடக்கிறது; அதில் நாங்கள் வெல்வோம்' என, அமெரிக்க அதிபர் தெரிவித்திருப்பதும், அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க, ஒரு டிரில்லியன் டாலர்களை ஒதுக்கியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, 'அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு; அரசு தெரிவிப்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் தான் டிரம்ப் இவ்வாறு கூறியிருக்கிறார்' என, பல நாட்டினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.